வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் கடந்தாண்டு வசூலாக வேண்டிய வரி 8.12 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. வரி நிலுவையை உடனடியாக செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில்3 லட்சத்து 69 ஆயிரத்து 980 வரி விதிப்புகள் உள்ளன. வரியினங்கள் மூலம் 55.48 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. கடந்த நிதியாண்டு (2012-13) கணக்கில், 8.12 கோடி ரூபாய் நிலுவையுள்ளது.
சொத்து வரியாக 35.35 கோடி வசூலிக்க வேண்டும்; 31.38 கோடி மட்டும் வசூலானது. 3.98 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
குடிநீர் கட்டணத்தில், 13.86 கோடி வசூலிக்க வேண்டும்; 10.44 கோடி வசூலானது. மீதம் 3.42 கோடி நிலுவையில் உள்ளது.
தொழில் வரியாக 1.77 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்; 1.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் 24.55 லட்சம் நிலுவை உள்ளது. குத்தகை கட்டணம் மூலம் 4.50 கோடி வசூலாக வேண்டும்; ஆனால், 4.02 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; மீதம் 47.81 லட்சம் ரூபாய் நிலுவையாக உள்ளது.
மொத்தமுள்ள வரியினங்கள் மூலம், 55.49 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியதில், 47.37 கோடியே வசூலிக்கப்பட்டது; 8.12 கோடி நிலுவையாக உள்ளது. நடப்பு (2013-14) நிதியாண்டுக்கான வரி வசூல் துவங்கப்பட்டுள்ளதால், நிலுவை வரியினங்கள் வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், “”கடந்தாண்டு வரி நிலுவையை வசூலிக்கும் விதமாக, வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, 90 சதவீதத்துக்கும் அதிகமாக வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார்.