தினத்தந்தி 27.08.2013
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை நகரசபை ஆணையாளர் விளக்கம்
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
குறித்து கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் சார்பில், கழிவுநீர் தொட்டி சுத்தம்
செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
நேற்று காலையில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
நகரசபை ஆணையாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். சுகாதார அதிகாரி ராஜசேகரன்,
என்ஜினீயர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் நிறுவனங்கள்,
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள், பள்ளி,
கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகரசபை
ஆணையாளர் வரதராஜன் பேசும்போது கூறியதாவது:–
கடைபிடிக்க வேண்டியவை
தொட்டியையும் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்ய கூடாது. தனியார்
நிறுவனங்கள், கட்டிடங்களில் கழிவுநீர் அகற்றும் போது நகரசபை அலுவலகத்துக்கு
கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். கழிவுநீர் அகற்றுவதற்காக
வடிவமைக்கப்பட்ட டேங்கர் லாரிகளில் மோட்டார் மூலம் கழிவுநீரை உறிஞ்சி
மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும்
தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும்.
கழிவுநீர் அகற்றும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் நிறுவனங்கள்,
கட்டிடத்தின் உரிமையாளரே பொறுப்பு ஆவார்கள். இவ்வாறு நகரசபை ஆணையாளர்
வரதராஜன் பேசினார்.