தினமலர் 27.08.2013
குற்றங்கள் தடுக்க மாநகராட்சி, போலீஸ்…கைகோர்ப்பு! கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்
திருச்சி: மாநகரில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை மாநகராட்சி மூலம் பொருத்தி, அதை போலீஸார் கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெளிநாடுகள் மட்டுமின்றி, நம் நாட்டிலும் முக்கிய நகர சாலைகள், கட்டடங்களில் நடக்கும் குற்றச் செயல்களை கண்டுபிடிக்க, கண்காணிப்பு கேமிராக்கள் (சி.சி.டி.வி.,) தான் கைகொடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வங்கி கொள்ளையர்களை அடையாளம் கண்டு, என்கவுன்டரில் சுட்டு கொலை செய்ய காரணமாக இருந்தது, கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவுகள் தான். அதேபோல் ஏ.டி.எம்., கொள்ளையர்களும் பிடிபடுவதும் கேமிரா மூலம் தான்.
கண்காணிப்பு கேமிரா இல்லாத காரணத்தால், பல நகைக்கடை கொள்ளை, வழிப்பறி, செயின்பறிப்பு, டூவீலர் திருட்டு, வீடுகளில் கொள்ளை, ஹிந்து அமைப்பு தலைவர்கள் கொலை போன்ற சம்பவங்களில், துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதன் பின்னர் தான் கட்டடங்கள், வங்கிகள், நகைக்கடைகள் என, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகள், சந்திப்புகளில் போக்குவரத்தை சீர்செய்யவும், போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு, போலீஸ் கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பொறுத்தப்பட்ட கேமிராக்களில் பல செயலிழந்து விட்டன. இந்நிலையில் பொது கட்டடங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் உபயோகப்படுத்தும் அனைத்து வகையான கட்டடங்களில். குற்றங்கள் தடுப்பதை தவிர்க்கும் வகையில், கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த கடந்த டிசம்பர் மாதம், மாநகராட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
போலீஸாருடன் இணைந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி திருச்சி மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவது தொடர்பாக. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
போலீஸார் தெரிவிக்கும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சியின், நான்கு கோட்ட பகுதிகளிலும், நவீன ரக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி, அவற்றை மானிட்டர் மூலம் போலீஸார் கண்காணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கேமிராக்களை பொறுத்தி, மூன்று ஆண்டுகளுக்கு அவற்றை இயக்கி, பராமரிக்கும் வகையில் டெண்டர் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கான செலவை சமாளிக்க, தனியார் நிறுவனங்கள், திருச்சி மாநகரில் அரசு விதிகளுக்கு உட்பட்டு விளம்பரங்களை செய்து கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்து கேட்கும் இடங்களில் விளம்பர செய்ய, கலெக்டர் அனுமதியுடன் உரிமம் வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாநகராட்சியின் அவசர கூட்டம் வரும், 29ம் தேதி காலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்துதல், தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய அனுமதித்தல் குறித்த தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவுள்ளது.
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறிவிட்டால், திருச்சி மாநகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என, அனைத்தும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடும். அதன் பிறகு குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என, போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.