மாலை மலர் 28.09.2009

சென்னை, செப். 28-
சென்னை மாநகராட்சி சார்பில் செனாய்நகர் 8-வது குறுக்குத் தெருவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன கலையரங்கம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு, கலையரங்கம் கட்டும் பணியினை துரிதப்படுத்தினார்.
அதன் பின்பு அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி சார்பில் செனாய் நகரில் ரூ. 10 கோடியே 28 லட்சம் செலவில் குளிர் சாதன வசதிகளுடன் கூடிய நவீன கலையரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 200 பேர் அமரும் வகையிலும், நவீன கழிப்பறைகள், குளிய லறைகள் வசதிகளுடன் கலையரங்கம் கட்டப்படுகிறது.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழ்த்தளம், தரைத்தளம், பால்கனி முதல் தளம் என 63 ஆயிரத்து 400 சதுரஅடி அளவில் இந்த கலையரங்கம் கட்டப்படுகிறது. லிப்ட் வசதிகள், 200 கார்கள், 225 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி கள் அமைக்கப்படுகிறது. கலை யரங்கத்தை சுற்றி அழகிய புல்வெளிகள் அமைக்கப் படுகிறது. 18 மாதங்களில் இந்த கலையரங்கத்தை முடிக்க திட்டமிருந்தாலும், ஒப்பந்த காலத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.