தினத்தந்தி 11.09.2013
வேலையில்லா பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வு, உயர் கல்விக்கான பயிற்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வு, உயர் கல்விக்கான பயிற்சியை
மேயர் சைதை துரைசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கல்வித்துறை மூலம் பயிற்சி
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மாநகரில்
படித்த பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி நிதிநிலை
அறிக்கையில் அறிவித்தபடி பல துறைகளைச் சார்ந்த கல்வியையும் (சி.ஏ.,
ஐ.சி.டயிள்யூ.ஏ., எம்.பி.பி.எஸ்., பி.இ., நுழைவுத்தேர்வுகள் பயிற்சி
மற்றும் யு.பி.எஸ்.சி. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பயிற்சி, கணினிக்
கல்வி போன்ற படிப்புகள்) அகில இந்திய–மாநில அளவிலான பல
வேலைவாய்ப்புகளுக்கான, உயர் கல்விக்கான போட்டித்தேர்வுகள் எழுதிடவும்,
பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்பவும், பள்ளிகளில்
இட வசதிக்கேற்ப இப்பயிற்சியினை தனியார் நிறுவனங்களைச் சார்ந்த
பயிற்சியாளர்களைக் கொண்டு கல்வித்துறையின் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
நாளை தொடக்கம்
சென்னைப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ–மாணவியர்களுக்கு முன்னுரிமை
வழங்கி சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பள்ளிகளில் படித்து, பட்டம்
பெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்ப போட்டித்தேர்வுக்கான
பயிற்சி கட்டணமில்லாமல் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும்
மாணவ–மாணவியர்கள் சென்னை மாநகராட்சி இணையதளம் www.chennaicorporation.gov.in மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், மேயர் சைதை
துரைசாமி இன்று (புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் சென்னை கீழ்ப்பாக்கம்
ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்தில் போட்டி தேர்வு மற்றும் உயர்கல்வி
பயிலுவதற்கான கலந்தாய்வினை தொடங்கி வைக்க உள்ளார்கள். சென்னையில் நடைபெறும்
இக்கலந்தாய்வு விழாவில் விண்ணப்பித்த அனைவரும் மற்றும் இணையதளத்தின் மூலம்
பதிவு செய்யாதவர்களும் வருகை தந்து கலந்து கொண்டு பயனடைய
அறிவுறுத்தப்படுகிறார்கள்.