தினத்தந்தி 26.09.2013
காங்கயம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு
வாடகை பணம் செலுத்தாததால் காங்கயம் பஸ் நிலையத்தில் உள்ள 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வாடகை பணம் செலுத்தவில்லை
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான
கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
இந்த வாடகை பணம் நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் தங்கவேல் என்பவர்
கடந்த 3 மாத காலமாக நகராட்சிக்கு வாடகை பணம் கட்டவில்லை. இது குறித்து
சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் தங்கவேலுவிடம் நகராட்சி சார்பில் விளக்கம்
கேட்டும் சரிவர பதில் அளிக்கவில்லை.
3 கடைகளுக்கு சீல் வைப்பு
இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ம.தமிழரசு, வாடகை கட்டாத தங்கவேலுவின் கடைக்கு சீல் வைத்தார்.
மேலும் பஸ்நிலையத்தில் தாட்கோ வணிக வளாகத்தில் கடை வைத்து இருக்கும் உஷா
என்பவரும் கடந்த 5 மாதங்களாகவும், சென்னியப்பன் என்பவர் கடந்த 6 மாத
காலமும் வாடகை பணம் செலுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ்
அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால் மேற்கண்ட இரு கடைகளுக்கும் நகராட்சி
அதிகாரிகள் சீல் வைத்தனர்.