தினமலர் 08.10.2013
நிதி தணிக்கைக்கு கணக்கு கொடுக்காத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை : மாநகராட்சி நடவடிக்கை
சென்னை : உள்ளாட்சி
நிதி தணிக்கைக்கு உரிய கணக்கு கொடுக்காமல் அதிகாரிகள் ஆண்டுக்
கணக்கில் இழுத்தடிப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக தணிக்கை அறிக்கை
வெளியிடமுடியாத நிலை உள்ளது. அந்த பணிகளை விரைந்து
முடிக்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என,
தற்போது மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சென்னை
மாநகராட்சியில் மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் மேயர் பதவி
வகித்த போது, மொத்தம், 417 கோடி ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு
ஏற்பட்டதாக, மேயர் சைதை துரைசாமி குற்றம்சாட்டினார். இழப்புக்கு
காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்த, வரி விதிப்பு மற்றும் நிதி
துறை துணை கமிஷனர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க மேயர்
உத்தரவிட்டார். கணக்கு வரவில்லை இந்த
குழு, ஒவ்வொரு ஆண்டு தணிக்கை அறிக்கையையும் பெற்று, அதில் எந்தெந்த
வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான ஆய்வு செய்து,
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை
நடத்தும்.
அதுகுறித்த ஆய்வின் போது தான், 2010ம் ஆண்டு முதல், மூன்று
ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை பெறப்படாமல் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து,
அந்த ஆண்டுகளுக்கான நிதி தணிக்கையை வழங்கும்படி, உள்ளாட்சி நிதி
தணிக்கை துறைக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அங்கிருந்து
மாநகராட்சிக்கு வந்த பதில் கடிதத்தில், கடந்த 2010ம் ஆண்டு முதலான
கணக்குகளை மாநகராட்சி அதிகாரிகள் சமர்ப்பிக்காததால், தணிக்கை
அறிக்கை வெளியிட முடியவில்லை. கணக்குகளை விரைந்து சமர்ப்பிக்க
மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும்
அறிவுறுத்துங்கள் என்று, கூறப்பட்டு இருந்தது. டிசம்பருக்குள்…இது
குறித்து தணிக்கை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை
மாநகராட்சியை பொறுத்த வரையில், நடைபெறும் பணிகள் குறித்து துறை
வாரியாக உள் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, உள்ளாட்சி நிதி தணிக்கைக்கு
மாநகராட்சி அதிகாரிகள் கணக்குகளை அளிப்பர்.
தணிக்கை அதிகாரிகள், மாநகராட்சி
அதிகாரிகள் வழங்கிய கணக்குகளை ஆய்வு செய்து, குறைபாடுகளைக்
கண்டறிந்து, தணிக்கை அறிக்கையாக வெளியிடுவர்.கடந்த மூன்று
ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகள் கணக்குகளை வழங்காததால்,
உள்ளாட்சி நிதி தணிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் அறிக்கையை வெளியிட முடியவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி
கூறினார். தணிக்கை துறை கடிதத்தின் தொடர்ச்சியாக, நிலுவையில் உள்ள
ஆண்டு நிதி கணக்குகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து,
உள்ளாட்சி
நிதி தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கும்படியும், தவறும்
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மாநகராட்சி கமிஷனர், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை
விடுத்து உள்ளார்.
நடவடிக்கைக்கு சபாஷ் : தணிக்கை அறிக்கை
தாமதமாக பெறப்படுவதால், பணி ஓய்வு பெற்ற பிறகு அதிகாரிகளிடம்,
இழப்பீட்டு தொகையை வசூலிப்பதில் சிரமம் நிலவுகிறது.
மாநகராட்சிக்கு
417 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் காலகட்டத்தில்
பணியாற்றிய அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் தற்போது ஓய்வுபெற்று
உள்ளனர்.
இழப்பு கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களிடம் இழப்பீட்டு
தொகையை எப்படி வசூல் செய்வது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதனால்
மாநகராட்சி அதிகாரிகள் இனி பணி ஓய்வு பெறும் போது, தணிக்கை இழப்பு
உள்ளதா என, ஆய்வு செய்த பிறகே பணி ஓய்வும், பண பலனும் வழங்க வேண்டும்
என்று, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது
அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற மூன்று அதிகாரிகளின்
தணிக்கை கணக்கு ஆய்வு செய்யப்பட்டு, இழப்பீடுகளை பிடித்தம் செய்ய
அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு உள்ளது.
இன்னும் வெளிவராத
மூன்று ஆண்டு தணிக்கை அறிக்கையில் ஏதேனும் இழப்பு அவர்களால் ஏற்பட்டு
இருந்தால், அதை ஓய்வூதிய அகவிலைப்படியில் பிடித்தம் செய்துகொள்ள சம்மதம்
தெரிவித்தும் கடிதம் பெறப்பட்டு உள்ளது. இத்தகய நடைமுறை அமலுக்கு
வந்தால், அரசு துறைகளில் நிதி மேலாண்மை சீராகும் என்பதில், எந்த
சந்தேகமும் இல்லை.