தினமணி 08.10.2013
திருவள்ளூர் நகராட்சியில் ஆதார் அட்டை வழங்கும் முகாம்
தினமணி 08.10.2013
திருவள்ளூர் நகராட்சியில் ஆதார் அட்டை வழங்கும் முகாம்
திருவள்ளூர் நகராட்சியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் ஆதார் அட்டை வழங்கும் முகாம் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் பொதுமக்களின் கைரேகைப் பதிவு, விழி ரேகைப் பதிவு மற்றும்
புகைப்படம் ஆகியவை எடுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படுகிறது.
பின்னர் அவர்களின் சுயவிவரங்கள் ஏற்கெனவே கணினியில் பதிவாகியுள்ளதுடன்
ஒப்பிடப்பட்டு சரியாக இருந்தால் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டைக்காக 2010-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பணியாளர்கள்
தயார் செய்து கொடுத்த பட்டியலை வைத்து பொதுமக்களின் சுயவிவரங்கள் தற்போது
சரிபார்க்கப்பட்டு வருகிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகாம்களில்
பங்கேற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த விண்ணப்பங்கள்,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினியில்
பதிவு செய்தப் பின்னர், விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் முகாம்
குறித்த தேதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் திங்கள்கிழமை 16, 17, 27 ஆகிய வார்டுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு சென்ற 100-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள், பட்டியலில்
இல்லை. குறைந்தபட்சம் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் வரையிலும்
விடுபட்டுள்ளதாக அப்பகுதி கவுன்சிலர்கள் கூறினர்.
இதனால் அதிருப்தியுடன் பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வந்தனர்.
இதுபோன்ற நிலைக்கு காரணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த
பணியாளர்களின் அஜாக்கிரதைதான் எனவும், விரைவில் விடுபட்டவர்களுக்கு
விரைவில் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்றும் நகர மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.