தினத்தந்தி 09.10.2013
தாம்பரத்தில் ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட முத்துரங்கம் பூங்கா 15–ந்தேதி திறப்பு

தாம்பரம் நகராட்சி முத்துரங்கம் பூங்கா ரூ.1 கோடி செலவில்
சீரமைக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன் திகழும் இந்த பூங்கா வருகிற
15–ந்தேதி திறக்கப்படுகிறது.
ரூ.1 கோடியில் பூங்கா சீரமைப்பு
தாம்பரம் நகராட்சியில் 3.78 ஏக்கரில் நகரின் மையபகுதியில் உள்ளது
முத்துரங்கம் பூங்கா. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில்
சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில்
பூங்கா சீரமைக்கப்பட்டது.
பூங்காவின் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
மேலும், பசுமை புல்வெளிகள், செயற்கை குளம், விலங்குகளின் சிலைகள், 2
செயற்கை நீருற்றுகள், சிறுவர் விளையாட்டு திடல், பூப்பந்து விளையாட்டு
திடல், 725 மீட்டர் நீளம் நடைபாதை, பொதுமக்கள் பயன்படுத்த
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் என அனைத்து வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன.
15–ந்தேதி திறப்பு
புதுப்பொலிவுடன் திகழும் முத்துரங்கம் பூங்கா 15–ந்தேதி திறக்கப்பட
உள்ளது. பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. திறப்பு விழா
நடைபெற உள்ளதை யொட்டி பூங்காவை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி
நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா,
பல்லாவரம் எம்.எல்.ஏ. ப.தன்சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த்
காம்ளே, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், தாம்பரம் நகராட்சித்
தலைவர் ம.கரிகாலன், ஆணையாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள்,
கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.