தினத்தந்தி 21.10.2013
சோழிங்கநல்லூரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.379 கோடி ஒதுக்கீடு ஜெயலலிதா உத்தரவு

சோழிங்கநல்லூரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.379 கோடி
ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நவீன தொழில் நுட்பம்
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக்
கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான உறைவிடத்தேவையைப்
பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள்
பயன்பெறும் வகையில் வீட்டுவசதித் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா
தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில்
கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பம்
என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, கட்டிட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள்
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்
தண்ணீர் மூலம் ‘நீராற்றுதல்’ செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.
ரூ.380 கோடி ஒப்புதல்
கட்டுமான பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு
கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் எந்திரங்கள் மூலம் நிலை
நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24
மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம்
24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.
முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 1,500
பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும்,
இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக
ஒப்புதல் வழங்கியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.