தினமணி 21.10.2013
மதுரையில் சீமைக் கருவேல் மரம் வளர்த்தால் அபராதம்: மாநகராட்சி அறிவிப்பு
மதுரை மாநகராட்சிப் பகுதியில் சீமைக் கருவேல்
மரம் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீறி வளர்ப்போரின்
நிலத்திலுள்ள சீமைக் கருவேல் மரங்கள் அகற்றப்படுவதுடன், ரூ. 500 அபராதம்
விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முயற்சியாக,
சீமைக் கருவேல் மரங்கள் வளர்ப்பதற்கு, மாநகராட்சி நிர்வாகம் தடை
விதித்துள்ளது.
இது தொடர்பாக, மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் மேலும் கூறியிருப்பது:
தனியார் இடங்களில் சீமைக் கருவேல் மரங்கள் (வேலிக் கருவை) வளர்ந்தால்,
நிலத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்தி
விடவேண்டும்.
இல்லையெனில், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சீமைக் கருவேல் மரங்கள்
அகற்றப்படுவதுடன், அதற்கான செலவுத் தொகையையும் சேர்த்து நிலத்தின்
உரிமையாளரிடம் வசூல் செய்யப்படும்.
குறைந்தபட்ச அபராதத் தொகையாக ரூ. 500 முதல் இடத்தின் பரப்பளவுக்கு
ஏற்றவாறு அபராதம் நிர்ணயம் செய்யப்படும். நிலத்தடி நீர் பாதுகாப்பினைக்
கருத்தில் கொண்டு எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல்
கோரப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.