தினமலர் 25.10.2013
சென்னை மக்களுக்கு தினமும் குடிநீர் :ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை : ”நீர் நிலைகளில், நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், சென்னை நகர மக்களுக்கு, தினமும் தேவையான அளவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின்போது, குடிநீர் பிரச்னை தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் முனுசாமி பதில் அளித்தார். அவற்றின் விவரம்: இந்திய கம்யூ., லிங்கமுத்து: குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட, பேரணாம்பட்டு நகரத்திற்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும். வேலுார் மாவட்டத்தில் உள்ள, வேலுார் மாநகராட்சி, 11 நகராட்சி, 5 பேரூராட்சி, 944 ஊரக குடியிருப்புகளுக்கு, மேட்டூர் அணை கீழ்புறம், செக்கானுார் அருகே, காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட, கூட்டுக் குடிநீர் திட்டம், 1,295 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த, அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், பயன்பெற உள்ள பகுதிகளில், பேரணாம்பட்டு நகரமும் ஒன்று. கால்நடைகள் தவிப்பு லிங்கமுத்து: அமைச்சருக்கு நன்றி. அதேபோல், பேரணாம்பட்டு ஒன்றியத்தில், உப்பு நீரால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் காசு கொடுத்து, தண்ணீர் வாங்கி, கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். எனவே, பேரணாம்பட்டு ஒன்றியத்திற்கும், வேலுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து, குடிநீர் வழங்க வேண்டும்.அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., அன்பழகன்: மதுரை மாநகராட்சியில், போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை. சில இடங்களில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இங்குள்ள மக்களுக்கு, நிரந்தர பாதுகாக்கப்பட்ட, குடிநீர் வழங்க வேண்டும். அமைச்சர்: கடந்த ஆட்சியில், இதுபோன்ற திட்டங்கள் தீட்டப்பட்டு, நிறைவு பெறவில்லை. முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், அப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், மதுரைக்கென முதல்வர், 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.
இந்நிதியில், குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கிராமங்களுக்கு தண்ணீர் இல்லை இந்திய கம்யூ., நஞ்சப்பன்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி. அதேநேரம், பல கிராமங்களுக்கு, குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. அவர்களுக்கு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில், சாலை பழுதடைந்து உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும்.
அமைச்சர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், மிகப்பெரிய பணி. இத்திட்டத்திற்காக, இரண்டு மாவட்டங்களில், 6,928 கி.மீ., துாரத்திற்கு, குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், ஆங்காங்கு சிறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சரி செய்து, அனைத்து பகுதிக்கும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையிடம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. விரைவில், சாலைகள் சீரமைக்கப்படும். சென்னை மக்கள் தவிப்பு மா.கம்யூ., சவுந்தரராஜன்: சென்னை நகரில், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. சில இடங்களில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. சில இடங்களுக்கு, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது, நீர் நிலைகளில், நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. எனவே, சென்னை மக்களுக்கு, தினமும் குடிநீர் வழங்கப்படுமா?
அமைச்சர்: வறட்சி காரணமாக, அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது, நீர் நிலைகளில், நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், மக்களின் தேவைக்கேற்ப, தினமும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தே.மு.தி.க., பாபுமுருகவேல்: வேலுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை, ஆரணி வரை நீட்டிக்க வேண்டும். அமைச்சர்: உறுப்பினர் மனு கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். வேலுார் திட்டத்தில் சேர்க்க முடியாது. இதற்கு தனி திட்டம் உருவாக்கப்படும்.
தி.மு.க., ராமச்சந்திரன்: குன்னுார் நகராட்சியில், 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்கப்படுகிறது. எமரால்டு ஏரியில் இருந்து, தண்ணீர் வழங்க, கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். அமைச்சர்: பரிசீலிக்கப்படும். மா.கம்யூ., – டில்லிபாபு: திருமூர்த்தி மலைப் பகுதியில், பழங்குடியின மக்கள், மின்சாரம், சாலை, குடிநீர் என, அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். அருகிலேயே ஆழியாறு அணை இருந்தும், தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.