தினமலர் 28.10.2013
காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கஷாயம் :அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் உத்தரவு
சென்னை : காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என்று, மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான அளவு நிலவேம்பு பொடி இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு
சென்னையில் பருவமழை துவங்கிய பிறகு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ‘டெங்கு, மலேரியா, சிக்குன்- குனியா’ போன்ற நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.
மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்புடன் வருவோர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளதால், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் குணம் கொண்ட நிலவேம்பு கஷாயத்தை நோயாளிகளுக்கு வழங்க அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும், மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கை
நிலவேம்பு கஷாயம் தயாரிக்கும் முறைகள் குறித்தும், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையும் போதுமான அளவு நிலவேம்பு பொடியை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் காய்ச்சப்பட்ட கஷாயத்தை உடனடியாக வழங்கவும், வீட்டில் அவர்கள் கஷாயம் தயாரிக்கும் முறையை விளக்கி, கையில் ஒரு பாக்கெட் நிலவேம்பு பொடியை இலவசமாக வழங்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வைரசை அழிக்கும்
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 80 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களும், 120 குடும்ப நலவாழ்வு மையங்களும் இயங்கி வருகின்றன.
இங்கு நிலவேம்பு கஷாயம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலவேம்பு கஷாயம் வைரசை அழிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கடந்த ஆண்டு டெங்கு அதிகரித்த போது இந்த கஷாயம் வழங்கப்பட்டது. தற்போது கஷாயம் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கஷாயம் தயாரிக்கும் முறை!
நிலவேம்பு பொடி ஒரு டீ ஸ்பூன் அளவில் 200 மி.லி., சுத்தமான தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடம் கொதித்த பிறகு, கஷாயத்தை வடிகட்டி மிதமான வெப்பநிலையில் 50 மி.லி., அளவில் குடிக்க வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், ஐந்து நாட்களுக்கு, தினசரி மூன்று வேளை கஷாயம் குடிக்கலாம். காய்ச்சல் வராமல் தடுக்கவும் இந்த கஷாயத்தை வாரம் இருமுறை அருந்தலாம் என்று சித்த மருத்துவர் வீரபாபு கூறினார்.