தினத்தந்தி 31.10.2013
‘200 ஆண்டுகள் பேசப்படும் 2 ஆண்டு சாதனைகள்’: மேயர் சைதை துரைசாமி நாளை பட்டியலிட்டு பேசுகிறார்

நாளை நடைபெறும் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 200 ஆண்டுகள்
பேசும் சாதனைகள் எனும் தலைப்பில் மேயர் சைதை துரைசாமி பட்டியலிட்டு
பேசுகிறார்.
நாளை மன்றக்கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை 9.30 மணி
அளவில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கிறது. அ.தி.மு.க.சார்பில்
சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்று கடந்த 25–ந்தேதியுடன்
2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, ‘‘200
ஆண்டுகள் பேசும் 2 ஆண்டு சாதனை’’ எனும் தலைப்பில் மேயர் சைதை துரைசாமி
பட்டியலிட்டு பேச உள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு,
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மேயர் சைதை
விளக்கமளிக்கிறார்.
கொசுவலைகள் கொள்முதல்
சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களும்
தங்கள் கருத்துக்களை வழங்க உள்ளனர். இதனால் வழக்கமாக காலை 10 மணிக்கு
தொடங்கும் மன்றக்கூட்டம், நாளை அரை மணி நேரம் முன்னதாக 9.30 மணிக்கு
தொடங்குகிறது.
இன்றைய மன்றக்கூட்டத்தில், சென்னையில் நீர்நிலைகள் அருகில் வசிக்கும்
மக்களுக்கு இலவசமாக வழங்க 78 ஆயிரத்து 188 கொசுவலைகள் கொள்முதல்
செய்வதற்காக ரூ.1 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 600 நிதி ஒதுக்கீடு
செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் மண்டலம் 8,9 மற்றும் 12
ஆகியவற்றில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்பும் வெளியாகிறது.
மாநகராட்சி பொன்விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகளும் வெளியிடபடலாம்
என்று தெரிகிறது.