தினமலர் 06.11.2013
கோழிக்கழிவை அகற்ற தனியாருடன் ஒப்பந்தம் : கோவை மாநகராட்சி திட்டம்
கோவை: கோழி இறைச்சி கழிவுகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முறை நேற்று துவங்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. பொதுச் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும், கோழி இறைச்சி கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து, கழிவுகளை ரோட்டோரத்திலும், குப்பை தொட்டிகளிலும் கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான வாகனத்தை, மேயர் வேலுசாமி நேற்று இயக்கி வைத்தார். கோவையில் தினமும் 5 முதல் 6 டன் வரையும், திங்கட்கிழமையில் 11 – 12 டன்னும் சேகரமாகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஈ தொல்லை அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பழநியிலுள்ள தனியார் நிறுவனத்தினர் கோழி இறைச்சி கழிவுகளை எடுத்து சென்று, இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். கோழி இறைச்சி கழிவுகளை எடுப்பதற்கு, தனியார் நிறுவனத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
கழிவுகளை தனியாக சேகரித்து ஒப்படைப்பதற்கு, மாநகராட்சிக்கும் அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைகளுக்கு “சீல்’
“கோழி இறைச்சி கடைகள் உரிமம் பெறாமல் செயல்படுகின்றன. இறைச்சி கழிவுகளை ரோட்டோரத்திலும், குப்பை தொட்டியிலும் கொட்டி விடுகின்றனர். ஒவ்வொரு வார்டிலும், தனிக்குழு மூலம் கோழி இறைச்சி கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சி எச்சரிக்கையை மீறி, இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால், கடைகளுக்கு “சீல்’ வைக்கப்படும்’ என, மேயர் வேலுச்சாமி தெரிவித்தார்.