தினத்தந்தி 19.11.2013
சென்னை ‘அம்மா’ உணவகங்களில் நாளை மறுநாள் முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைக்கிறார்

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்கும் நவீன எந்திரம்
மூலம், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை மறுநாள் முதல் ரூ.3–க்கு 2
சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா
‘காணொலி’ காட்சி மூலம் அறிமுகம் செய்து வைக்கிறார்.
அம்மா உணவகம்
சென்னையில் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 வார்டுகளிலும் சென்னை
மாநகராட்சியின் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணி
முதல் 10 மணி வரை காலை உணவாக ஒரு இட்லி ரூ.1–க்கும், பொங்கல் ரூ.5–க்கும்,
மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மதிய உணவாக ரூ.5–க்கு சாம்பார்
சாதமும், ரூ.5–க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதமும்,
ரூ.3–க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் மாலை நேர உணவாக ரூ.3–க்கு, 2
சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர்
ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ரூ.3–க்கு 2 சப்பாத்திகள்
அதன்படி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் (புதன்கிழமை) முதல் மாலை
நேர உணவாக ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணியில்
சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் 14 மையங்களில் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை
தயார் செய்யும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில்
சப்பாத்திகள் தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
சோதனையில் சப்பாத்தியின் சுவையும், பருப்பு கடைசல் சுவையும் அருமையாக
வந்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள்
மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ‘காணொலி’ காட்சி
மூலம்(வீடியோ–கான்பரன்சிங்)நாளை மாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.
தனியார் நிறுவனம்
அம்மா உணவகத்தில் சப்பாத்தி வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி உயர்
அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில்
சப்பாத்தி செய்வதற்கான கோதுமைகளை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம்
வழங்குகிறது.
சப்பாத்தி தயார் செய்யும் பணியினை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு தனியார்
கேட்டரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தான் நவீன சப்பாத்தி
எந்திரங்களை கொள்முதல் செய்து வழங்கி உள்ளது.’ என்றார்.
பார்சல் கிடையாது
- ஒரு சப்பாத்தி 6 அங்குலம் அளவும், 30 கிராம் எடையும் கொண்டது.
- சப்பாத்தியுடன் 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படும்.
- மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்திகள்(இருப்பு இருக்கும் வரை) கிடைக்கும்.
- காலை மற்றும் மதிய உணவுகளை போன்றே சப்பாத்திகளுக்கும் பார்சல்கள் கிடையாது.
- முதற்கட்டமாக ஒருநாளைக்கு ஒரு அம்மா உணவகத்துக்கு 2 ஆயிரம்
சப்பாத்திகள் வீதம் 200 அம்மா உணவகத்துக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயார்
செய்து வழங்கப்படும்.
- 25 கிலோ கோதுமை மாவு நவீன எந்திரம் மூலம் 15 நிமிடங்களில் பிசையப்படுகிறது.
- ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாத்திகள் வரை தயார் செய்யப்படுகிறது.