தினமலர் 25.11.2013
21 இடங்களில் “நம்ம டாய்லெட்’ டூ ரூ. 3.98 கோடி செலவில் திட்டம்
கோவை :கோவை மாநகர எல்லைக்குள் 21 இடங்களில், 3.98 கோடி ரூபாய் செலவில் “நம்ம டாய்லெட்’ அமைக்கப்படுகிறது. இதனால், ரோட்டோரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும்; ரோடும் சுத்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி சார்பில், வெளியூர் பயணிகள், பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக, “நம்ம டாய்லெட்’ அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, ஈச்சனாரியில் பரிட்சார்த்த முறையில், அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 21 இடங்களில், 3.98 கோடி ரூபாய் செலவில் “நம்ம டாய்லெட்’ அமைக்கப்படுகிறது. இதற்காக, சென்னை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.
டிச., முதல் வாரத்தில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். கழிப்பிடம் இருப்பதை தெரிவிக்கும் வகையில், ரோடுகளில் 200 மீட்டருக்கு முன் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈச்சனாரியில் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதத்துடன், “நம்ம டாய்லெட்’ அமைக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 600 பேர் பயன்படுத்துகின்றனர். கிழக்கு மண்டலத்தில் அவிநாசி ரோடு சிட்ரா (ரூ. 21 லட்சம் மதிப்பீடு), சவுரிபாளையம் கக்கன் நகர் (ரூ.23 லட்சம்), காளப்பட்டி பிரதான சாலை (ரூ.24.50 லட்சம்), முத்துமேடு – பெண்கள் (ரூ.14 லட்சம்), காளப்பட்டி (ரூ.14 லட்சம்), நேரு நகர் பஸ் ஸ்டாப் (ரூ.24.5 லட்சம்), சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் (ரூ. 14 லட்சம்) ஆகிய ஏழு இடங்களில் அமைக்கப்படுகிறது.
மேற்கு மண்டலத்தில், பூசாரிபாளையம் சாலை – பெண்கள் (ரூ. 28 லட்சம்), வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில் (ரூ. 24.5 லட்சம்), வீரகேரளம் மனோஜ்நகர் (ரூ. 24.5 லட்சம்), கவுண்டம்பாளையம் மயானம் (ரூ. 24.5 லட்சம்) ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்படுகிறது.
வடக்கு மண்டலத்தில், வெள்ளக்கிணறு உருமாண்டாம்பாளையம் (ரூ. 14 லட்சம்), விளாங்குறிச்சி – சரவணம்பட்டி ரோடு (ரூ.24.5 லட்சம்) ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில், கோணவாய்க்கால்பாளையம் -பெண்கள் (ரூ. 21 லட்சம்), பொள்ளாச்சி பிரதான சாலை ஈச்சனாரி – பெண்கள் (ரூ. 11 லட்சம்), அன்னபுரம் (ரூ. 14 லட்சம்), என்.டி.பி. வீதி சுண்டக்காமுத்தூர் (ரூ. 21 லட்சம் ), வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகில் (ரூ.14 லட்சம்) ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்படுகிறது.
மத்திய மண்டலத்தில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., மைதானம், மத்திய பஸ் ஸ்டாண்ட் (நகர்) ஆகிய மூன்று இடங்களில், தலா ரூ. 14 லட்சம் மதிப்பில் “நம்ம டாய்லெட்’ அமைக்கப்படுகிறது. ஐந்து முதல் எட்டு பேர் பயன்படுத்தும் வகையில் தனித்தனி அறை அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம், சோலார் மின் விளக்கு வசதி, மேல்நிலைத்தொட்டி, செப்டிக் டேங்க், நவீன டேப் வசதியுடன் அமைக்கப்படும். இதற்காக, 3.98 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோடு சுத்தமா இருக்கும்: “கோவை மாநகர எல்லைக்குள், இலவச கழிப்பிடம், பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தாலும், பல இடங்களில் ரோட்டோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அதனால், “நம்ம டாய்லெட்’ அமைக்கும் இடங்களில், வழித்தடத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இதனால், ரோட் டோரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும்; ரோடும் சுத்தமாக இருக்கும்’ என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.