தினமணி 4.11.2009
ஒழுகினசேரி செம்மாங்குளத்தை ரூ.2 கோடியில் சீரமைக்க திட்டம்
நாகர்கோவில், நவ. 3: நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள செம்மாங்குளத்தை சீரமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் நகரின் முக்கிய நீராதாரமாக 16 ஏக்கர் பரப்பளவில் இருந்த செம்மாங்குளம் தற்போது கழிவுநீர் தேக்கமாக மாறியிருக்கிறது.இந்த குளத்தை சுற்றிலும் பல்வேறு குடியிருப்புகளும் தோன்றி வருகின்றன.
குளத்தை முற்றிலும் மறைத்து நீர் தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் நகரில் பெரும் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. இக் குளத்தை தூர்வாரி, சீரமைத்து மீண்டும் புதுப்பொலிவாக்க வேண்டும் என்று இப் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இக் குளத்தை சீரமைக்க ரூ. 2 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 25 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதாக ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இக் குளத்தில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். குளத்தை சீரமைப்பது தொடர்பாக நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது ஆட்சியர் தெரிவித்தார்.
ராஜன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் ஜானகி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சிறில் கிறிஸ்டோபர், உதவி செயற்பொறியாளர் மலையரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.