தினமணி 31.12.2013
மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி
மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம், மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் பேசுகையில், “”மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் வயதான நபர்கள், மலையில் படி ஏற சிரமப்படுகின்றனர். எனவே, ரோப் கார் வசதி ஏற்படுத்திட வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசுகையில், “”மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்தின் கொண்டு செல்லப்படும்” என்றார்.
அதைத் தொடர்ந்து, மருதமலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
46 தீர்மானங்கள் நிறைவேற்றம்: மாநகராட்சி அவசர கூட்டத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் போட்டால் அபராதம், மாநகராட்சி பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்தல் உள்பட மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.