தினமலர் 04.01.2014
மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக அறிவியல் மையம்
சென்னை: சென்னை மாநகராட்சியின், நான்கு நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் இயங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் மேலும் ஆறு பள்ளிகளில் அறிவியல் மையம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி வசம், 92 நடுநிலை பள்ளிகள் உள்ளன. அவற்றில், 20 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அந்த மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிதில் கற்பிக்கும் வகையிலும், இளம் பருவத்திலேயே மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், நான்கு மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் தற்போது அறிவியல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.பயிலரங்கம்அந்த மையத்தை பருவத்திற்கு ஒரு முறை என, மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று அனைத்து மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் திருவல்லிக்கேணி மாநகராட்சி நடுநிலை பள்ளி அறிவியல் மையத்தை பார்வைஇட்டனர். பின்னர் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது. தேடுதல், ஆராய்தல், கண்டறிதல் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி கல்வித்துறை இதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தது.கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ”நடப்பாண்டில் மேலும் ஆறு மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம், 10 நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் துவங்கப்படும்,” என்றார்.
தனியார் நிறுவன துணை தலைவர் உமா மகேஷ் கூறுகையில், ”வரும் பிப்., 28ம் தேதி மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ரீதியான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் முதலிடம் பிடிக்கும் குழுவினர் சிங்கப்பூரில் உள்ள அறிவியல் மையத்திற்கும், இரண்டாமிடம் பிடிக்கும் குழுவினர் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு பிரபல அறிவியல் மையத்திற்கும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு ‘ஐ பேட்’ பரிசும் வழங்கப்படும்,” என்றார்.