மாலை மலர் 06.01.2014
வலங்கைமானில் 2917 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்
வலங்கைமான், ஜன.6 – திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் தொகுப்பு பொருள்கள் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும் விழா வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவாரூர் கலெக்டர் சி.நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் 2917 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலைகளையும் அரிசி வாங்கும் குடும்ப அட்டை பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பைகளையும் அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி பேசும்போது கூறியதாவது:-
நமது மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி வளர்ச்சி பெற வேண்டும். கிராம மக்கள் சாமானிய அடிதட்டு மக்களும் அரசின் அனைத்து திட்ட பயனையும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதலமைச்சர் திட்டங்களை அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு விலையில்லா பொங்கல் பைகள் 3 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இது போன்று அனைத்து திட்டங்களை பயன்படுத்தி முதலமைச்சருக்கு அரசிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து ஊத்துக்காடு ஊராட்சியில் 424 பயனாளிகளுக்கும், வேலங்குடி ஊராட்சியில் 412 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர் மிக்சி ஆகியவற்றை உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாத்தூர் அ.குருமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் அழகிரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் உதவி கலெக்டர் பரமசிவம் மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன், தாசில்தார் வெங்கட்ராமன், ஒன்றிய திட்ட ஆணையர் தில்லை நடராஜன், வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், ஊத்துகாடு ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதேவராஜன், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.