தினமலர் 22.01.2014
தெருநாய்களை பிடிக்க சிறப்பு வாகனம்
உடுமலை : உடுமலை நகர தெருக்களில், பொதுமக்களை மிரட்டும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில், சிறப்பு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர குடியிருப்புப்பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களால், குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகவும் தெரு நாய்கள் காரணமாக இருக்கின்றன என நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் அளிக்கப்பட்டன.
தெருக்களில், சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகளை தாக்கும் சம்பவங்களும் நகரப்பகுதியில் நடந்தன. இவ்வாறு, தெருநாய்கள் குறித்த புகார்கள் அதிகரிக்கும் போது, நகராட்சி நிர்வாகம், தனியார் வாகனம் மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இவ்வாறு, நகரப்பகுதியில், திரிந்த 880 நாய்கள் தனியார் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருப்பினும், தனியார் வாகனத்தை பயன்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், அட்டகாசம் செய்யும் தெருநாய்களை பிடிக்க ரூ.7.80 லட்சம் மதிப்புள்ள “நாய்கள் பயண வாகனம் ‘ வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்பணிக்காக ஐந்து பேர் கொண்ட பணியாளர் குழுவிற்கு நகராட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனம் வாரம் இருமுறை நகர பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவுள்ளது.
இதனால், தெருநாய்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்; அவை பொது மக்களை துன்புறுத்துவதையும் கட்டுப்படுத்தலாம்; தெருநாய்களை கட்டுப்படுத்த தனி வாகனம் மற்றும் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அச்சுறுத்தும் நாய்கள் பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண முடியும் என நகராட்சி சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.