தினத்தந்தி 27.01.2014
காங்கிரஸ் அலுவலகம்-மாநகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
குடியரசு தினவிழா
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலமன்றத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். முன்னதாக காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழாவில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சி பாபு, மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் பாரி, முத்துக்குமார், சத்தியநாதன், சந்தான கிருஷ்ணன், தனபால், முன்னாள் தலைவர் ராஜகோபால், சேகர், ஜோசப், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வக்கீல் சரவணன் தலைமையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சியில்…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மேயர் ஜெயா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவுக்கு ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 33 நபர்களுக்கும், திருச்சி மாநகராட்சி பசுமைப்பூங்காவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களும், மாநகராட்சி பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 37 மாணவ,மாணவிகளுக்கும், ஸ்ரீரங்கம் மாநகராட்சியில் பள்ளியில் யோகாசனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற15 மாணவ, மாணவிகளுக்கும், ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பணிகளை சிறப்பாக செய்த 4 அலுவலர்களுக்கும், பேருந்து விரைவுத்திட்டம் மற்றும் நவீன ஆட்டிறைச்சி கூடம் அமைப்பதற்கு கருத்துரு தயார் செய்யும் பணியினை சிறப்பாக மேற்கொண்டமைக்கு 2 அலுவலர்களுக்கும், பூங்கா பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்த ஒரு அலுவலருக்கும், பஞ்சப்பூர் பூங்கா அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட2 அலுவலர்களுக்கும் மேயர் ஜெயா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மேயர் ஜெயா அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காந்தி சந்தை வளாகத்தில் உள்ள காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி கோர்ட்டு
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி பி. வேல்முருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் நீதிபதி ரகுமான், குற்றவியல் தலைமை நீதிபதி பாலச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் வீரபாண்டியன், துணை தலைவர் அருள், ஓம்பிரகாஷ் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதியின் நேர் முக உதவியாளர் மகேஷ்குமார் மற்றும் அனைத்து மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டனர்.