தினமணி 6.11.2009
குமரி பேரூராட்சியில் 91 தாற்காலிக சீசன் கடைகள் ரூ. 15 லட்சத்துக்கு ஏலம்
கன்னியாகுமரி, நவ. 5: கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்க உள்ள நிலையில் பேரூராட்சி சார்பில் தாற்காலிகக் கடைகள் ஏலம் புதன்கிழமை தொடங்கியது. மொத்தம் 244 கடைகள் ஏலம்விட பேரூராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி காலை 10 மணிக்கு ஏலம் தொடங்கியது.
முதல் கட்டமாக புதன்கிழமை 91 கடைகள் ஏலம் விடப்பட்டன. இதில், கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட உள்ள 58 கடைகள் ரூ. 12,73,900-க்கும், சன்னதி தெருவில் அமைக்கப்பட உள்ள 33 கடைகள் ரூ. 2,58,900-க்கும் ஏலம் போயின.
மீதமுள்ள கடைகள் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெற்றதைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .