தினமணி 26.08.2014
தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தினமணி 26.08.2014
தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளில் ரூ.800
கோடியில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
கடந்த மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில்
குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என 445 அடிப்படை வசதிப் பணிகள் ரூ.413.36
கோடியில் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை
நிதியுதவியுடன் ரூ.282.44 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம்
செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று
வருகின்றன.
பாதாள சாக்கடை திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட
பகுதிகளான அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி,
தூத்துக்குடி புறநகர் ஆகிய ஐந்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத்
தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ரூ.20 கோடியில்
29.74 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரக் கேடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர்
மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின்
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், விடுபட்ட பகுதிகளில் ரூ.300 கோடியில்
பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகள்: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில்
கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.327.29 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்,
சாலைகள் என 63 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பெரும்பாலானப்
பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் நீர் ஆதாரம்,
குடிநீர் பகிர்மான கட்டமைப்பைப் மேம்படுத்தும் வகையில், ரூ.230 கோடியில்
புதிய திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான
ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.
ரூ.490 கோடியில் திட்டம்: பாதாள சக்கடைத் திட்டம் இல்லாத மாநகராட்சிப்
பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத்
தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு
ரூ.490 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 8 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டுப்
பணிகளால் சேதமடைந்த 61 கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ.35.20 கோடியில்
மறுசீரமைக்கப்படும். மேலும், திருநெல்வேலி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுவதுடன்,
அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்
என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.