தினமணி 31.10.2014
தினமணி 31.10.2014
பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு
சலுகைகள் வழங்க தில்லி மேம்பாட்டு நிறுவனம் (டிடிஏ) திட்டமிட்டு வருகிறது.
இதற்கான வரைவு திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த
கருத்தரங்கில் தில்லி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலர்
சஞ்சீவ் குமார் பங்கேற்று பேசியதாவது: “பசுமைக் கட்டடங்களில்
குடியிருப்பவர்களுக்கு நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகள் வழங்க டிடிஏ
திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த
வரைவு திட்டம் மத்திய அரசு உருவாக்கி வரும் நவீன நகரங்களுக்கு ஒரு
மைல்கல்லாக அமையும்’ என்று கூறினார்.
இந்தியா கிரீன் பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவர் பிரேம் சி ஜெயின்
பேசுகையில், “பசுமைக் கட்டடங்களை கட்டுவோருக்கு கூடுதல் தளங்கள் அமைக்க
அனுமதி அளிக்கலாம். இது நிதி அல்லாத சலுகைகளாகும்.
அதே நேரத்தில் இந்த வகையான கட்டடங்களுக்கு சொத்து வரி போன்ற வரிச் சலுகைகள் வழங்கலாம். இது நிதிச் சலுகைகளாகும் என்று கூறினார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற புது தில்லி தொகுதி எம்.பி. மீனாட்சி லேகி
பேசுகையில், “பசுமைக் கட்டடங்கள் அமைக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு
அளிக்கும். இந்த விவகாரத்தில் டிடிஏவை தவிர பிற அரசுத் துறைகளும் உதவி
செய்யும்.
அதேபோல் பெரிய கட்டடங்களில் சேரும் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன்
மூலம் கிடைக்கும் எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்’
என்று கூறினார்.