தி இந்து 24.03.2017
குடிநீர் எடுக்க பயன்படுத்திய 136 மின் மோட்டார்கள் பறிமுதல்: மாநகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் எடுக்க
பயன்படுத்தப்பட்ட 136 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை மாநகராட்சியில் வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர்
திட்டங்களில் பொதுமக்களுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம்
செய்யப்படுகிறது. வைகை அணை வறண்டதால் மதுரை மாநகராட்சியில் தற்போது கடும்
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், குடிநீர் பற்றாக்குறையுள்ள
வார்டுகளில் லாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம்
செய்கிறது. குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என புகார் கூறும் பகுதிகளில்
அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சில குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகம் மற்றும்
ஹோட்டல்களில் வசதிபடைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மின்மோட்டார்
வைத்து குடிநீர் உறிஞ்சுவதாகவும், அதனால், குடிநீர் சரிவர கிடைப்பதில்லை
என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி மண்டலம்
வாரியாக பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒன்றாவது மண்டலம்
பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுக்க
பயன்படுத்தப்பட்ட 26 மின்மோட்டார்கள், 2-வது மண்டலம் பகுதியில் 53
மின்மோட்டார்கள், 3-வது மண்டலத்தில் 35 மின் மோட்டார்கள், 4-வது
மண்டலத்தில் 22 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம்
136 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்டோரின்
குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸில் புகார் செய்யப்படும்
மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “குடிநீர் குழாய் இணைப்பில்
மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும்.
இதுபோன்று செயல்படுவோரின் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன்
காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான
புகார்களையும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது தொடர்பான
புகார்களையும் மாநகராட்சியின் வாட்ஸ் அப் எண் 74491 04104 மற்றும் 0452 –
2525252 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்” என்றார்.