தினமணி 12.04.2017
கோடையின் ஆதிக்கம் தொடங்கியது: வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் வாரியம் யோசனை
சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வறட்சியை
எதிர்கொள்வது குறித்தும், எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை தக்க
வைத்துக்கொள்வது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரிய
அதிகாரிகள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், புழல்
உள்ளிட்ட 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவில் (11 டிஎம்சி) தற்போது 10 சதவீத
தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதேபோன்று நிலத்தடி நீரின் அளவு இதுவரை
இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில்
0.70 மீட்டரும், அதிகபட்சமாக திரு.வி.க.நகர் பகுதியில் 2.88 மீட்டரும்
குறைந்துள்ளது.
இருப்பினும் பிற குடிநீர் ஆதாரங்கள் மூலம் மொத்த தண்ணீர் தேவையில் 70
சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில்
சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்க மாதத்துக்கு 1 டிஎம்சி (1,000
மில்லியன் கன அடி) தண்ணீர் தேவைப்படும். வெயிலின் தாக்கம் மேலும்
அதிகரித்தால் ஆவியாதல் முறையில் அதிகளவு தண்ணீர் வீணாவதோடு, குடிநீர் தேவை
அதிகரிக்கும்.
எனினும் எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், ஆழ்துளை கிணறுகளை
முறையாக பயன்படுத்துதல், மழை நீர் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற
நடவடிக்கைகள் மூலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க
முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:
சென்னையில் கடந்த 2000, 2002-ஆம் ஆண்டுகளில் தற்போது உள்ள குடிநீர்
வறட்சியைக் காட்டிலும் 2 மடங்கு மோசமான நிலை இருந்தது. அந்த கால
கட்டங்களில் 4 ஏரிகளிலும் தண்ணீர் முற்றிலும் வறண்டது. அந்த நிலையிலும்
குடிநீர் லாரிகள், வீராணம் தண்ணீர் மூலமாக பொதுமக்களின் குடிநீர்த்
தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது. இதனால் நிகழாண்டிலும் குடிநீர்த்
தட்டுப்பாட்டை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சமாளிக்க முடியும் என்ற
நம்பிக்கை உள்ளது.
70 லிட்டர் தண்ணீர் வரை…:சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை
ஒரு நபருக்கு சராசரியாக 125 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது
பற்றாக்குறை காரணமாக 70 லிட்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு
மேலும் குறைந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம்.
வீட்டில் குடிநீர் குழாயில் ஒரு சொட்டு நீர் கசிந்தாலும் கூட 10 மணி
நேரத்தில் 20 லிட்டர் தண்ணீர் வீணாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள
வேண்டும். குளிப்பது, துணிகளைத் துவைப்பது போன்றவற்றுக்கு மொத்த தேவையில்
40 சதவீதம் தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்த தண்ணீரை கல்வாழையைப் பயன்படுத்தி எளிமையான கட்டமைப்புகள் மூலம்
மறுசுழற்சி செய்தால் அந்த நீரை செடிகள், கழிவறைகளுக்கு மீண்டும் பயன்படுத்த
முடியும். இதற்கான திட்டத்தை பொதுமக்கள் குடிநீர் வாரியத் தலைமை
அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலன் பெறலாம். ஒரு வீட்டில் 10 லிட்டர் தண்ணீர்
வீணாவதைத் தடுத்தால் 15 லட்சம் வீடுகளில் தினமும் 1.50 கோடி லிட்டர்
தண்ணீரை சேமிக்கலாம்.
வீடுகளில் மின் மோட்டார்களை பயன்படுத்தும் பொதுமக்கள் காலையில் 1 மணி
நேரம், மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு
முறை பயன்படுத்துவதற்கும் அடுத்த முறை பயன்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 9
மணி நேரம் இடைவெளி தேவை. அப்போதுதான் நீருட்டல் சீராக இருக்கும். மின்
மோட்டாரை தொடர்ச்சியாக இயக்குவதால் மின்சாரம் வீணாவதோடு, நீருட்டலில்
பெரும் தடை ஏற்படும்.
இந்தாண்டு கோடை மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்
பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளைச் சீரமைக்க
வேண்டும். மழை நீரை எளிதில் உட்கிரகிக்கும் வகையில் அதில் உள்ள குப்பை,
கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி
குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில
ஆண்டுகளாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும்
தவறான செயலாகும்.
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான்.
இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த்தேவைகளை கட்டாயம்
பூர்த்தி செய்வோம். அதே நேரத்தில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும்
பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என
அவர்கள் தெரிவித்தனர்.