தினமணி 10.11.2009
54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் மா. சுப்பிரமணியன்
சென்னை, நவ. 9: சென்னையில் மழை கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; இம் முகாம்களில் இதுவரை 10 ஆயிரத்து 249 பேருக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டது என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வட சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது:
மாநகராட்சியின் 10 மண்டலங்களிலும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. போஜராஜ நகர், கொண்டித்தோப்பு, காந்தி நகர், டி.பி. சத்திரம், இந்திரா காந்தி நகர், கணேசபுரம் உள்ளிட்ட 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம் முகாம்களில் 75 மருத்துவர்கள், 50 துணை மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சளி, இருமல், தோல், ஒவ்வாமை, காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இம் முகாம்களில் 6,812 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதவிர தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கடந்த 2 நாள்களில் மட்டும் இதுவரை 78 ஆயிரத்து 808 குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.இப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியில் 130 புகை பரப்பும் இயந்திரங்களும், 154 தெளிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த, இதுவரை 2.70 லட்சம் பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்னையில் மழையால் சேதமுற்ற 366 சாலைகளில் 7,355 சதுர மீட்டர் அளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிக்காக 123 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.