தி இந்து 24.05.2018
24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி
மாணவர்கள் 24,000 பேருக்கு இலவசமாக 2 செட் சீருடைகளை வழங்குவதற்காக ரூ.2
கோடியே 15 லட்சம் செலவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகளை கொள்முதல்
செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் சொந்த செலவிலேயே சீருடைகளை வாங்க
வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி
பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2
செட் சீருடைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
2018-19 நிதியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களின் எண்ணிக்கை 24,195 என மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்க உள்ளது. அதற்கான துணிகளை
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் வாங்க மாநகராட்சி
நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும்போது,
அவர்களுக்கு சீருடைகளை வழங்கும் விதமாக பணிகள் துரிதமாக நடைபெற்று
வருகின்றன.