தினமணி 10.11.2009
காய்ச்சிய குடிநீரை பருகுங்கள்: ஆட்சியர்
திருவள்ளூர், நவ. 9: திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருவதையொட்டி மக்கள் அனைவரும் காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும் என குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் பழனிகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மக்களின் குறைகள் சம்மந்தமான 50-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். பின்னர், சிவகாமி அம்மையார் நினைவு இரண்டு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு தலா ரூ.30,400 வீதம் வைப்புத் தொகை பத்திரமும், மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 41 பேருக்கும் உதவித் தொகை உள்பட மொத்தம் 10 லட்சத்து 2,400 ரூபாய்க்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பழனிகுமார் பேசும்போது, தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் குடிநீரில் நோய் கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். மேலும் தாங்கள் வீடுகளின் முன் தேங்கியுள்ள மழை நீரை மக்கள் தாங்களாகவே அகற்றி கொசுக்களின் உற்பத்தியை தவிர்க்க வேண்டும். மழை காரணமாக வெள்ளம் மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.