தினமணி 14.11.2009
30 நாள்களுக்குள் கட்டட வரைபட அனுமதி
கோவை, நவ.13: கட்டட வரைபடம், மனைப்பிரிவு, நிலப்பயன்பாடு மாற்றம் ஆகிய விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் சுர்ஜித் கே.செüத்ரி தெரிவித்தார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட்டட வரைபட அனுமதி அளிப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார். நகர் ஊரமைப்புத் துறை ஆணையர் அசோக் டோங்க்ரே, மாவட்ட ஆட்சியர்கள் பி.உமாநாத் (கோவை), ஆர்.சுடலைக்கண்ணன் (ஈரோடு), சி.சமயமூர்த்தி (திருப்பூர்), கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் பின்னர் வீட்டுவசதித் துறைச் செயலர் சுர்ஜித் செüத்ரி செய்தியாளர்களிடம் கூறியது: கோவை மண்டலத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் கட்டட வரைபட அனுமதிக்கு நீண்ட தாமதம் ஏற்படுவதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதி கோரி இதுவரை 1,027 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. அதிகபட்சமாக கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் மட்டும் 825 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அதேபோல தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய கட்டடங்களுக்கான வரைபட அனுமதி கோரி 551 விண்ணப்பங்கள், பலமாடிக் கட்டட அனுமதிக்கு 51 விண்ணப்பங்கள், மனைப்பிரிவு அனுமதி கோரிய 120 விண்ணப்பங்கள், நிலப் பயன்பாடு மாற்றத்துக்கு 263 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
தேவையான ஆவணங்கள் இல்லாமை, முழுமையாகப் பூர்த்தி செய்யாதது போன்ற காரணங்களால் பெரும்பாலான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பங்கள் பெறும்போதே அத்தகைய குறைபாடுகள் இருப்பின் உடனடியாகத் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம். இனி வரும் காலங்களில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற்று 30 நாள்களுக்குள் வரைபட அனுமதி வழங்கப்படும்.
நிலுவையில் உள்ளவற்றில் குறைபாடு உள்ள விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். மற்ற விண்ணப்பங்களுக்கு டிச.15-க்குள் அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது அவற்றில் தேவையான ஆவணங்களை இணைத்து, முழுமையாகப் பூர்த்தி செய்வது அவசியம். கட்டடப் பொறியாளர்கள், உரிமம் பெற்ற சர்வேயர்கள் கூட விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்பிப்பது இல்லை. கோவை உள்ளூர் திட்ட குழுமத்தில் மட்டும் சர்வேயர்கள், பொறியாளர்கள் சமர்ப்பித்தவற்றில் 302 விண்ணப்பங்கள் குறைபாடுகளுடன் உள்ளன. இதே நடைமுறை தொடர்ந்தால் உரிமத்தை தாற்காலிக ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய கட்டணமாக கோவை உள்ளூர் திட்டக் குழுமத்திடம் ரூ.27 கோடி உள்ளது. இதில் 2 திட்டச் சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலையையும், திருச்சி சாலையையும் இணைக்கும் ரங்கவிலாஸ் மில் சாலை; நவஇந்தியா சாலையையும், நூறடி சாலையையும் இணைக்கும் திட்டச் சாலைகள் அவை. ஆன்–லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.