தினமணி 17.11.2009
நாமக்கல்லில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்
நாமக்கல், நவ. 16: மலேரியோ, சிக்குன்–குனியா உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தவும், கொசுக்களை ஒழிக்கும் வகையில் நாமக்கல் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சிக்குன்–குனியா காய்ச்சல் பரவ துவங்கியுள்ளதால் அனைத்து நகராட்சிகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தியுள்ளது.
இதன்படி, நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் நீர் தேங்கும் பகுதிகளில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இவைதவிர, கிணறுகள், மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், வீடுகளில் கட்டப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி ஆகியவற்றிலும் அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் வீதிகள் தோறும் நகராட்சி வாகனத்தின் மூலம் கொசு மருந்து புகை அடிக்கும் பணியும் நடைபெறுகிறது. நகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.