தினமணி 17.11.2009
பாதாளச் சாக்கடைத் திட்டம்: ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ராமநாதபுரம், நவ.16: ராமநாதபுரம் நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தாமதமாவதற்கான காரணம் குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜி.லலிதகலா ரெத்தினம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நகரின் மேம்பாட்டுக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் அ.தி.மு.க.ஆட்சியின் போது திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் பங்களிப்பு கேட்டு அந்த நிதியும் பெறமுடியாத நிலையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் இத்திட்டத்தை மக்களின் வசதி கருதி நிறைவேற்றுவோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இரு ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் 92 சதவீதப் பணிகள் முடிந்து 8 சதவீத பணிகள் மட்டுமே காலதாமதமாக நடந்து வருகின்றன. துணை முதல்வர், ஆட்சியர் ஆகியோரின் தொடர் ஆய்வின் காரணமாக 92 சதவீத பணிகள் நடந்திருக்கின்றன.
மீதமுள்ள பணியை துணை– ஒப்பந்ததாரர்கள் தான் செய்து முடிக்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.
இதனால் நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தும் குடிநீர் வடிகால் வாரியம் அப்பணிகளை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்தால் மட்டுமே நகரில் சாலைகளை சீராக்க முடியும் என்ற அரசு விதி உள்ளது.
மழைக்காலம் தொடங்கி விட்டதால் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் துணை ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்பட்டு விட்டது.
விதிமுறையை மீறி சாலைகள் அமைத்து இருந்தால் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு சென்று பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு தடை பெற்று அதற்கான இழப்பீட்டு தொகையினை நகராட்சி நிர்வாகமே ஏற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும்.
எனவே நகர் மக்களின் நலன் கருதி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்குமாறு சம்மபந்தப்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.பணிகளை விரைவாக முடித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சிக்கும் நற்பெயர் எடுத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் மழைக்காலங்களால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் ஆர்.ஜி.லலதகலா ரெத்தினம் கேட்டுக்கொண்டுள்ளார்.