தினமணி 17.11.2009
பொது இடங்களில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர்
புதுக்கோட்டை, நவ. 16: சாலைகள் மற்றும் பொது இடங்களில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் சாலைகள் மற்றும் பொது இடங்களில் உலவுவதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் விபத்தும் ஏற்படும் நிலை உருவாகிறது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டிவைத்து பராமரிக்க வேண்டும்; மீறி பொது இடங்களில் கால்நடை கள் உலவினால் அவை நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அரசு கால்நடைப் பட்டிகளில் அடைக்கப்படும். மேலும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததாக குற்ற வழக்கு பதிவுசெய்து கடும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.”