தினமணி 30.11.2009
பன்றிக் காய்ச்சல்: 6 மாவட்டங்களில் வீடு வீடாக பரிசோதனை
சென்னை, நவ. 29: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் வீடு வீடாக மருத்துவ சோதனை செய்ய பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 2,300 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,400 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 20,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ். இளங்கோ தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு…: கோவை, ஊட்டியில் உள்ள சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று வருகின்றனர்.
இதையடுத்து, இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்த அறிவுறுத்தலை பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது. அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, காய்ச்சல் உள்பட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் குறித்து உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் டாக்டர் இளங்கோ.