தினமணி 12.12.2009
பரமக்குடி நகராட்சியில் விண்ணப்பித்த 7 நாளில் குடிநீர் இணைப்பு: ஆணையர்
பரமக்குடி,டிச.11: பரமக்குடி நகராட்சியில் குடிநீர் இணைப்புக் கேட்டு கோருவோர் உரிய டெபாசிட் தொகையை செலுத்தினால் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என ஆணையர் பொப.மு.நெ. முஜிபுர்ரகுமான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பரமக்குடி நகராட்சிக்கு, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் 12.6.2009 முதல் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக நகர் மக்கள் பயன்பெறும் வகையில், கூடுதலாக 5ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
குடிநீர் இணைப்பு கோருவோர், குடியிருப்புகளுக்கு டெபாசிட் தொகை யாக ரூ. 7 ஆயிரமும், குடியிருப்பு அல்லாதவைகளுக்கு வணிக வளாகங்களுக்கு ரூ.15 ஆயிரமும் சாலை சேதாரம் சீரமைப்பு கட்டணம்,மேற்பார்வைக் கட்டணம், செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே பணி உத்தரவு வழங்கப்படுவதுடன் குடிநீர் இணைப்பு 7 நாள்களுக்குள் வழங்கப்படும்.
குடிநீர் இணைப்புக் கோருவோர் தாங்களே பிளம்பர்களைக் கொண்டு தங்களது கட்டடங்களில் குழாய்களைப் பதித்த பின், நகராட்சியில் தெரிவித்தால் பகிர்மானக் குழாயிலிருந்து உடனடியாக் இணைப்பு வழங்கப்படும். பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.