தினமணி 16.12.2009
பெங்களூர் மாநகராட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்
பெங்களூர், டிச.15: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தல் அறிவித்தபடி அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.
பெங்களூர் மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்த பட்டியலை ரத்து செய்து புதிய பட்டில் தயாரித்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும், புதிய பட்டியல் தயாரிக்க காலதாமம் ஆகும் என்று அரசு கருதுவதாகவும் கூறப்பட்டது. இதனால் தேர்தலைத் தள்ளிவைக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் கூறினர்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் அமைச்சர் அசோக். அப்போது அவரிடம் மாநகராட்சித் தேர்தல் திட்டமிட்படி நடைபெறுமா என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதில் அளித்து அசோக் கூறியதாவது:
மாநகராட்சித் தேர்தலை கடந்த 3 ஆண்டுகளாக அரசு நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதற்கு பாஜக அரசு காரணமல்ல. பாஜக ஆட்சிக்குவந்து ஒன்றை ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன் ஒன்றரை ஆண்டுகள் வேறு கட்சி ஆட்சி இருந்தது. அப்போது அவர்கள் ஏன் தேர்தலை நடத்தவில்லை. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 100 வார்டுகளாக இருந்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிக்கப்பட்டு வார்டுகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சியுடன் புதிதாக 8 நகரசபைகள் ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 210 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அந்தப் பணிகளை எல்லாம் முடித்து தேர்தலை நடத்த வசதியாக வார்டுகள் இட ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. எல்லா சட்டப்பேரவை தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு வார்டுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதை தலைமை நீதிபதி தினகரன் அடங்கிய பெஞ்ச் வரவேற்று பாராட்டு தெரிவித்தது. அதன்பிறகு வேறு ஒரு வழக்கில் இட ஒதுக்கீடு வார்டுகளில் அதிகம் உள்ள சமூகத்தினர் அடிப்படையில்ó அமைய வேண்டும் என நீதிபதி கோபால கெüடா அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் புதிய இட ஒதுக்கீடு பட்டியலை அளிக்க 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 23-ம் தேதிக்குள் வார்டுகளுக்கு புதிய இட ஒதுக்கீடு பட்டியல் தயாரித்து நீதமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அதற்கான பணிகளில் நகர வளர்ச்சித்துறை ஈடுபட்டுள்ளது. இன்னும் 4 அல்லது, 5 நாட்களில் பட்டியல் தயாராகிவிடும்.
எனவே, பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு,பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும். அதை ஒத்திவைக்க அரசு எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இட ஒதுக்கீடு பிரச்னையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் எண்ணமும் இல்லை என்றார் அவர்.