தினமணி 20.12.2009
மூலக்கரை நவீன எரிவாயு தகன மேடையில் ரூ.1350 கட்டணத்தில் சடலம் எரியூட்டப்படும்
மதுரை, டிச. 19: மதுரை மூலக்கரை நவீன எரிவாயு தகன மேடையில் ரூ.1350 கட்டணத்தில் சடலம் எரியூட்டப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
மூலக்கரை பகுதியில் மாநகராட்சி மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆணையர் எஸ்.செபாஸ்டின் தலைமையில் அனைத்து முதல்நிலை அலுவலர்கள் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பின்னர் ஆணையர் தெரிவித்ததாவது:
இந்த மயானத்தில் தியான மண்டபம், முடி எடுக்கும் இடம், கார் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, தொலைபேசி வசதி, கழிப்பறைகள் மற்றும் குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நவீன முறையில் அமைக்கப்பட்டு, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
ஆம்பூலன்ஸ் வசதியுடன் சடலத்தை கொண்டுவருதல், மொட்டை அடித்தல், இறப்பு சான்றிதழ், சீருடைகளுடன் கூடிய பணியாளர்களைக் கொண்டு நல்லமுறையில் தகனம் செய்தல் போன்ற பணிகளுக்கு ரூ.1350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக 2090900 என்ற தொலைபேசி எண்ணும் வழங்கப்ட்டுள்ளது. இந்த மயானம் மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் மூலம் பராமரிக்கப்படவுள்ளது. இந்த மயானத்தில் ஒரே நேரத்தில் 3 சடலங்களை எரியூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன எரிவாயு தகன மேடை இந்த மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாடுக்குக் கொண்டுவரப்படும். ஏழை, எளிய மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆணையர்.
கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர்கள் தேவதாஸ், ரவீந்திரன், அங்கையற்கண்ணி, ராஜகாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.