தினமலர் 31.12.2009
கோவை மாநகராட்சி மாடுகள் ரூ.1.58 லட்சத்துக்கு ஏலம்
கோவை: கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியில் காலங்காலமாக பயன்பாட்டில் உள்ள மாட்டு வண்டி முறையை ஒழிக்க நகர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, குறுகிய தெருக்களில் குப்பை அள்ள சிறிய அளவிலான 12 “கேரேஜ் வாகனம்‘ வாங்கப் பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்த 110 மாடுகளை, கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து, உழைப்பதற்கு தகுதி இல்லாத 33 மாடுகளை ஏலம் விட அனுமதி வழங்கினர். இதற்கான ஏலம், புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள மாநகராட்சி மாட்டுத்தொழுவத்தில் நேற்று நடந்தது; 15 வியாபாரிகள் பங்கேற்றனர். முன் வைப்பு தொகையாக ஒவ்வொருவரும் 16 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியிருந்தனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) சுமதி, மாநகராட்சி விலங்கியல் பூங்கா இயக்குனர் பெருமாள்சாமி, மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிநாயகம் ஆகியோர் ஏலம் நடத்தினர்; 33 மாடுகள் தலா 2,500 முதல்7, 500 ரூபாய் வரை ஏலம் போனது. இதன் மூலம், மாநகராட்சிக்கு 1.58 லட்சம் ரூபாய் கிடைத்தது.