தினமலர் 06.01.2010
6 இடங்களில் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம்
நாமக்கல்: “நாமக்கல் நகராட்சியில் 3வது குடிநீர் திட்டப்பணிகள் 9.90 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது’ என, மத்திய அமைச்சர் காந்திச்செல்வன் தெரிவித்தார். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் தெரிவித்தாவது: நாமக்கல் நகராட்சியில் 3வது குடிநீர் திட்டப்பணிகள் 9.90 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் நடக்க உள்ளது. குடிநீர் தொட்டி அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் மார்ச் இறுதிக்குள் திட்டப்பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கு பணி நடந்து வருகிறது. விரைவில் எரிவாயு தகன மேடை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். நாமக்கல் நகராட்சிக்கு பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் முதன்முறையாக நாமக்கல் நகராட்சியில் 3.71 கோடி ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பையாக இருந்தால் அதை உரமாக தயாரிக்கவும், மக்காத குப்�யாக இருந்தால் அதை அறிவியல் ரீதியாக, அதற்கென தனியாக குழிகள் அமைத்து அதை மேலாண்மை செய்வது போன்ற பணிகளும் லத்துவாடி, கொசவம்பட்டி பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் ஆறு மாத காலத்திற்குள் முடிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நகராட்சி சேர்மன் செல்வராஜ், கமிஷனர் ஆறுமுகம், நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.