தினமலர் 19.01.2010
ரூ.3.75 லட்சம் மதிப்பில் புதிய குப்பைத் தொட்டிகள்
கூடலூர் : கூடலூர் நகராட்சியில், ரூ.3.75 லட்சம் மதிப்பில், டம்பர் பிளேசருக்கு உண்டான புதிய குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளிலிருந்து, குப்பையை லாரிக்கு ஏற்றுவதில் நிலவும் சிரமத்தை தவிர்க்க, “டம்பர் பிளேசர்‘ (குப்பைத் தொட்டியை தூக்கி செல்தல்) லாரி மூலம் எடுத்து சென்று குப்பை கொட்ட வலியுறுத்தப்பட்டது. இதற்காக புதிய லாரி வாங்காமல், குப்பை எடுத்து செல்லும் லாரியை, டம்பர் பிளேசர் லாரியாக மாற்றலாம் என மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
டம்பர் பிளேசருக்கு உண்டான குப்பைத் தொட்டிகளை வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 12வது மாநில நிதிக் குழு சார்பில் ஒதுக்கப்பட்ட 3.75 லட்சத்தில், டம்பர் பிளேசருக்கு உண்டான 8 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன; இதை எடுத்து செல்ல, சாதாரண லாரியை, டம்பர் பிளேசர் லாரியாக மாற்றியுள்ளனர்.
நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, “”குப்பைத் தொட்டியை தூக்கி செல்லும் டம்பர் லாரியில், ஒரு குப்பைத் தொட்டி காலியாக இருக்கும். குப்பை நிரம்பிய இடத்தில், காலி தொட்டியை வைத்து விட்டு, நிரம்பிய தொட்டி எடுத்து செல்லப்படும்; இதற்கான பணி விரைவில் துவங்கும்,” என்றனர்.