தினமலர் 19.01.2010
அடுக்குமாடி வீடுகள் ஆபத்தானதா? ‘அச்சம் வேண்டாம்‘ என்கிறார், கமிஷனர்
கோவை : கோவை நகரை குடிசையில்லா நகராக்கும் திட்டம், மூன்று கட்டமாக 443.55 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. கோவை நகரம் நில அதிர்வு மண்டலமாக இருப்பதால், ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட வேண்டாம், என, கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நகர்ப்புற ஏழை மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கோவை மாநகர பகுதியை குடிசையில்லா நகராக்கும் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக மாநகர பகுதியிலுள்ள 173 குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதே இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 258.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.
அதே போன்று, மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியி<லுள்ள நீர் நிலைகள், நெடுஞ்சாலையோர பகுதிகள், ரயில்வே துறைக்கு சொந்தமான இடம், தனியார் நிலம், ஆட்சேபகரமான பகுதிகள் என்று 91 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து வசிக்கும் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, உக்கடம் பிலால் நகர் அருகே உள்ள மாநகராட்சி கழிவு நீர் பண்ணை இருந்த 80.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 91 குடிசை பகுதியில் வசித்து வந்த 9,600 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 184.80 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு மாநகராட்சி மதிப்பீடுகள் தயார் செய்துள்ளது.கோவை நகரம், நில அதிர்வு மண்டலத்தில் மூன்றாமிடத்தில் இருப்பதால், குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நில அதிர்வை தாங்கும் வகையில் வலுவாக(மோனோலித்திக் கான்கிரீட் கொண்டு) கட்டப்படவுள்ளது.
இதற்காக, பொதுப்பணித்துறையினர் மதிப்பீடு தயார் செய்து 430 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். திட்ட நிதி ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக 245.20 கோடி ரூபாய் செலவழித்து பணிகளை மேற்கொள்ள முடியாததால், கட்டடப்பணிகளை இரு பகுதியாக மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தரை மற்றும் மூன்று தளங்களை கொண்ட 48 அடுக்குமாடி கட்டடங்களில் 3,960 குடியிருப்புகள் கட்டவும், இரண்டாம் கட்டமாக 23 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மா.கம்யூ., கட்சி தலைவர் பத்மநாபன் கூறுகையில், “” 400 கோடி ரூபாயை கான்கிரீட்டில் போடுவதற்கு பதிலாக, மாநகரை ஒட்டியுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தி, தனி வீடுகளை கட்டித்தர வேண்டும்,” என்றார். மாநகராட்சி இ.கம்யூ., கட்சி தலைவர் புருஷோத்தமன் கூறுகையில், “”நில அதிர்வு மண்டலமாக கோவை நகரம் கண்டறியப்பட்டுள்ளதால், மாநகராட்சி சார்பில் 4,5 அடுக்குகளை கொண்ட குடியிருப்புகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மாற்று குடியிருப்பு திட்டச் செலவுக்கு மாநகராட்சி கூடுதலாக 240 கோடி ரூபாயை பொது நிதியிலிருந்து பெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சிக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். பெரும் தொகையை கட்டடத்தின் மீது செலவு செய்தால் பெரிய அளவில் வருவாய் ஏதும் கிடைக்காது. இதனால், இத்திட்டத்தை ஒத்திவைப்பது நல்லது,” என்றார். இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில்,””எர்த் புரூப் போடப்பட்ட பின்னரே அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுகிறது; அச்சம் தேவையில்லை,” என்றார்.