தினமலர் 27.01.2010
இடம் ஒதுக்கீடு : நடைபாதை வியாபாரிகளுக்கு மாநகராட்சி கணக்கெடுப்பு
கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக நடை பாதையில் வியாபாரம் செய்வோருக்கு, மாநகராட்சி நிர்வாகம் இடவசதி செய்து தர கணக்கெடுப்பு நடத்துகிறது.தேசிய தெரு வியாபாரிகள் கொள்கையை 2004 ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. அனைத்து மாநிலங்களிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் கொள்கையை பின்பற்ற உத்தரவு பிறப்பித்தது.முக்கிய நகரங்களிலுள்ள தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் நலன் கருதி இக்கொள்கையை நிறைவேற்றியது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாநில அரசு இக்கொள்கையை செயல்படுத்த உத்தரவிட்டது.பெரும்பாலான மாநிலங்களில் இக்கொள்கை செயல்படுத்தப்படவில்லை. கோவை மாநகராட்சி இக்கொள்கையை கடைபிடித்து அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கான சிறப்பு திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.கோவை மாநகராட்சி எல்லையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் , முக்கிய ரோடுகள், தெருக்கள், டைபாதையில் கடைவிரித்து வியாபாரம் செய்கின்றனர். நிரந்தர வியாபாரம் செய்வோர், சீசனுக்கு ஏற்ப பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர், வெளியூரிலிருந்து வந்து வியாபாரம் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியும், “கோவை ஐ.சி.சென்டர் பார் இ–கவர்னான்ஸ்‘ என்னும் தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய திட்டத்தை உருவாக்கியது.வியாபாரிகள் குறித்த தகவல்களை சேகரிப்பது, போட்டோ எடுப்பது, ஒவ்வொரு வியாபாரிக்கும் டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கீரை, பால் விற்பனை செய்பவர்கள், காலை 11.00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட்களில் காபி, டீ விற்பனை செய்பவர்கள், இது தவிர இளநீர், தர்பூசணி, பப்பாளி விற்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.இத்திட்டம் குறித்து “ஐ.சி.சென்டர் பார் இ–கவர்னான்ஸ்‘ நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரத்தில் வியாபாரம் செய்வோருக்கு பலன் கிடைக்கும். தெருவியாபாரிகள் இது வரை எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இன்று இந்த இடம், நாளைக்கு வேறு இடம் என்ற அடிப்படையில் வியாபாரம் செய்து வந்தனர்.வியாபாரம் மேற்கொள்ளும் தெரு வியாபாரிகள் அனைவரையும் இணைத்து மாநகராட்சி பகுதிக்குள் பெரிய டம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அங்கு பொதுமக்கள் தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கு வசதி செய்யப்படும்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு குறையும். அதே சமயம் பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும். அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.தெருவோர கடை நடத்தும் வியாபாரிகள் கூறியதாவது:மாநகராட்சி இலவசமாக இத் திட்டத்தை செய்து கொடுக்காது. மறைமுகமாக வருவாய் ஈட்டுவதற்கு பார்க்கிறது. மாநகராட்சி இவ்வளவு ஏற்பாடும் செய்கிறதென்றால், ஒரு கடைக்கு குறைந்த பட்ச வாடகையை நிர்ணயம் செய்யும். வாடகை ஏதும் இல்லாமல், பெரிய முதலீடு இல்லாமல் அன்றாடம் வருவாய் ஈட்டி வருகிறோம். பொதுமக்களின் பார்வை, விற்பனை செய்யும் பொருள் மீது பட்டால் மட்டுமே, எங்களுக்கு வருவாய் கிடைக்கும். பார்வையில்லாத ஏதோ ஒரு பகுதியில் கடை அமைத்துக்கொடுத்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து எங்கள் சங்கத்தில் விவாதித்து முடிவு எடுப்போம் என்று கூறினர்.இது குறித்து அடுத்த மாதம் கருத்துக்கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு,விருப்பப்படும் வியாபாரிகளுக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக லைசன்ஸ் வழங்க மாநகராட்சி திட்டமிட் டுள்ளது.அன்றாடம் மாமூல் கொடுக் கும் வியாபாரிகளுக்கு, ஜாக் பாட் அடித்ததாக ஒரு தரப்பு கூறுகிறது.மற்றொரு தரப்பு வியாபாரிகளை வைத்து சூதாட்டம் நடத்துவதாக மாநகராட்சியை குற்றம் சொல்கிறது.இத்திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்றுமா அல்லது தள்ளி வைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.