தினமலர் 29.01.2010
மாநகராட்சி வசம் 8 குளங்கள் : பொதுப்பணித்துறை ஒப்படைப்பு
கோவை : எட்டு குளங்களின் பராமரிப்பு பொறுப்பை, பொதுப்பணித்துறையினர் முறைப்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் எட்டு குளங்களை பொதுப்பணி துறையினர் பராமரித்து வந்தனர். இவை, மாநகரின் மிகப்பெரும் நீராதாரங்கள். பல ஆண்டுகளாக குளங்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வந்தனர். சமீபத்தில், தமிழக அரசு எட்டு குளங்களையும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதன்படி, குளங்களை பராமரிக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதற்கான நிகழ்ச்சி, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மேயர் வெங்கடாசலம், துணைமேயர் கார்த்திக், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உள்பட பலர் பங்கேற்றனர். பொதுப்பணித் துறை உதவி நிர்வாக பொறியாளர் (பாசனம்) வெங்கடாசலம், உதவி நிர்வாக பொறியாளர் (நொய்யல்) ராஜம், இளநிலை பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேயர் வெங்கடாசலம் கூறுகையில், “”ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் நகரிலுள்ள எட்டு குளங்களை புனரமைக்க 127.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “”குளங்களை தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், கரையோரத்தில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்படும்,” என்றார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ” எமது பராமரிப்பில் 44 குளங்கள் உள்ளன. குளங்களுக்கு பிரதானமாக விளங்குவது நொய்யல் ஆறு. குளங்கள் அனைத்துமே நொய்யல் ஆற்றின் அருகில் வரிசைப்படி அமைந்துள்ளதால், ஒரு குளம் நிரம்பிய பின் மற்ற குளங்களுக்கு எளிதாக தண்ணீர் பாய்கிறது. மாநகராட்சி – பொதுப்பணித்துறை இடையே சுமுக உறவு உள்ளதால் குளங் கள் பராமரிப்பில் பிரச்னை எழாது‘ என்றனர்.
கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: குளங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து கட்சி கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., தவிர, மற்ற கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக ஒப்பந்த ஆவணங்களை மாற்றிக் கொள்ளும் போது போட்டோ எடுக்கப் பட்டது.
அப்போது குறுக்கிட்ட மேயர் வெங்கடாசலம், “கவுன்சிலர்கள் எல்லோரும் அவரவர் இருக்கையில் அமருங்கள்; யாரும் இங்கு வரவேண்டாம்‘ என்றார். இதைக்கேட்டு கோபமடைந்த கவுன்சிலர்கள் சிலர், நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினர்.