தினமணி 01.02.2010
பெரம்பூர் மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும்: மு.க. ஸ்டாலின்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் (இடது)
சென்னை, ஜன. 31: பெரம்பூர் மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும், முதல்வர் கருணாநிதி அதை திறந்து வைக்க உள்ளார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக லிப்டுடன் கூடிய நடை மேம்பாலம், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது:
பெரம்பூர் மேம்பாலப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாலத்துக்கு அருகில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைக்க உள்ளார்.
நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குவதால், லிப்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு, ரூ. 60.88 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சைதாப்பேட்டை மண்டலம்}9}லும், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் இடத்தின் அருகில் வாலாஜா சாலையிலும் தலா ரூ. 94 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நடை மேம்பாலங்களின் பயன்பாடு மற்றும் வரவேற்பைப் பொருத்து, சென்னையில் தேவையுள்ள மற்ற பகுதிகளிலும் லிப்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றார்.
மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி: இந்த நடைமேம்பாலம் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்படும்போது, லிப்ட் பாதி வழியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக “பாட்டரி‘ பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 நிமிடங்களுக்கு லிப்டை இயக்க முடியும். லிப்டை இயக்குவதற்காக உதவியாளர் ஒருவரும் மாநகராட்சி சார்பில் பணியமர்த்தப்பட உள்ளார் என்றார். விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.