தினமலர் 02.02.2010
மாநகராட்சி இனங்கள் குத்தகை காலம் 3 ஆண்டாக நீட்டித்து ஆணை
ஈரோடு: மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான குத்தகை காலம் நடப்பாண்டு முதல் மூன்றாண்டாக நீட்டித்து நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள தினசரி சந்தை, வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ் கட்டணம், பஸ் ஸ்டாண்டில் “டிவி‘ மூலம் விளம்பரம் செய்வது, வாகன ஸ்டாண்ட், மாநகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி, வணிக வளாக கடைகள், பூ வியாபார உரிமம், கட்டணக் கழிப்பிடம், பூங்காவில் உள்ள கட்டணக் கழிப்பிடம், ஆடு, மாடு வதை கூடம் உள்பட பல்வேறு இனங்களுக்கு ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுக்கும் குத்தகைதாரர்கள் இந்த இனங்களை ஓராண்டுக்கு அனுபவித்துக் கொள்ளலாம். மாநகராட்சி வருவாயின் பெரும்பங்கு இதன் மூலம் கிடைக்கிறது. மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான குத்தகை காலத்தை மூன்றாண்டுக்கு நீட்டித்து நகராட்சி நிர்வாகம் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள சந்தை, பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற இனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் 2009-10ம் ஆண்டு முதல் மூன்றாண்டுக்கு நீட்டித்து, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள அங்காடிகள், பஸ் ஸ்டாண்டு, சந்தைகள், மிதிவண்டி நிறுத்துமிடங்கள், கட்டண கழிப்பிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து இனங்களிலும் கட்டணங்கள் வசூலிக்கும் உரிமைக்கான குத்தகை கால அளவை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓராண்டில் இருந்து மூன்றாண்டுகளாக மாற்றியமைத்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாணை 2009-10ம் ஆண்டு முதலான குத்தகை இனங்களுக்கு மட்டுமே பொருந்தும். நடைமுறையில் உள்ள குத்தகை இனங்களுக்கு பொருந்தாது.
நடப்பு 2009-10ம் ஆண்டில் பல மாநகராட்சிகளில் ஆண்டுக் குத்தகை முடிவுற்ற பின்னரே 2009 மே 25ம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் மூன்றாண்டுகளுக்கு குத்தகை நிபந்தனைகளை திருத்தி அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விட வேண்டும். 2009-10 ஆண்டில் ஓராண்டுக்கு ஏலம் விடப்பட்ட இனங்களில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என குத்தகை உரிமம் நீட்டிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார