தினமலர் 03.02.2010
பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: கம்பம் நகராட்சி முடிவு
கம்பம்: கம்பத்தில், நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய அரசு, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கம்பம் நகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கம்பத்தில் தேரடி, தாத்தப்பன்குளம், பார்க் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு குடிநீர் சுத்திகரிப்பு மினி பிளாண்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகளில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக் கும்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கம்பம் பகுதியில் ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு பிளாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள் ளது. அதைப் போன்று நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மினி பிளாண்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் சுத்தமான குடிநீர் மாணவ மாணவிகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப்படும். இதற்கான நிதியை கல்வி நிதியில் இருந்து ஈடுசெய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.