தினமலர் 03.02.2010
உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்கள் டெண்டர்களில் கலந்து கொள்ள தடை
தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் பொறுப்பில் உள்ளவர்கள் டெண்டர்களில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ள தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்கள் பலர் அரசின் அடிப்படை கட்டமைப்பணிகளை செய்து வருகின்றனர். இப்பணிகளை செய்வதற்கு இவர்கள் பெயரிலோ அல்லது மற்றவர்களின் பெயர்களில் ஒப்பந்த அனுமதி பெற்று பணிகள் நடந்து வருகிறது. உள்ளாட்சிகளின் பொறுப்பில் இருப்பதால் இவர்கள் செய்யும் வேலைகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. இதனால் தரமற்ற பணிகளே நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. இதில், உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் டெண்டர்களில் ஒப்பந்தகாரர்களாக கலந்து கொள்ள தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.