தினமலர் 04.02.2010
மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் வசூல்! : ஆய்வு நடத்த கமிஷனர் முடிவு
கோவை: கோவை மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த, கமிஷனர் முடிவு செய்துள்ளார். கோவை மாநகராட்சி மின் மயானங்கள், நகரில் சொக்கம்புதூர், ஆத்துப் பாலம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ளன.
ஒவ்வொரு மின் மயானத்திலும் தினமும் ஆறு பிரேதங்கள் வரை எரியூட்டப்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேதம் எரியூட்ட 750 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள மின் மயானம் தவிர, மற்ற இரு மின் மயானங்களில் பிரேதம் எரியூட்ட, உறவினர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வேறுவழியின்றி நகரவாசிகள் பலரும் மின் மயானத்தையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சுடுகாட்டில் பிரேதம் எரிக்க விறகு, பருத்திக்கொட்டை, டீசல் அல்லது மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை கொண்டு ஆள் வைத்து எரிக்க அதிக செலவு ஏற்படுவதால், மின் மயானத்தையே நாடுகின்றனர். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மின் மயான பொறுப்பாளர் கூறியதாவது: சொக்கம்புதூர் மற்றும் ஆத்துப்பாலம் மின் மயான பராமரிப்பு பொறுப்பை, “ஜூவாலா எக்யூப்மென்ட்ஸ் அண்ட் கன்சல்டன்சி‘ என்ற தனியார் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. பிரேதம் எரியூட்ட மாநகராட்சி நிர்ணயம் செய்த 750 ரூபாய் மட்டும் வசூலிப்பது சாத்தியமற்றது. காரணம், வீடு மற்றும் மருத்துவமனைகளுக்கு எங்களது ஆம்புலன்சை அனுப்பி பிரேதத்தை மயானத்துக்கு எடுத்து வர, 7 கி.மீ.,தொலைவு வரை 1,500 ரூபாய் வசூலிக்கிறோம். பல வழிகளிலும் உதவி செய்கிறோம். இதனால், சற்று கூடுதலாக வசூலிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி அநியாய கட்டணம் ஏதும் எங்களால் வசூலிக்கப்படுவதில்லை. காலை 8.00 முதல் மாலை 4.00 மணி வரை முன்பதிவு செய்கிறோம். மின் மயானத்தில் ஒரு நாளைக்கு ஆறு பிரேதங்கள் வரை எரிக்கலாம். சொக்கம்புதூரிலுள்ள மின் மயானத்தில், ஒரு எரியூட்டு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதை சரிசெய்யும் பணி நடக்கிறது. பிரேதத்தை மயானத்துக்கு எடுத்து வர தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் வேண்டுமானால் அதிக தொகை கேட்டிருக்கலாம். அந்தச் செலவையும், மின் மயானச் செலவையும் ஒப்பிட்டு ஆயிரக்கணக்கில் கூடுதலாக செலவாவதாக யாராவது தெரிவித்தால் அது தவறு.
இவ்வாறு, மின்மயான பொறுப்பாளர் தெரிவித்தார். அதிகரித்து வரும் புகார் காரணமாக மின் மயான பராமரிப்பு பொறுப்பை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. கூடிய விரைவில் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மின் மயான கட்டணம் தொடர்பான புகார் குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “”சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவிக் கமிஷனர்களை அனுப்பி நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் கான்ட்ராக்ட் ரத்து செய்யப்படும்,” என்றார